January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய 6 பேர் மன்னாரில் கைது!

யுத்தக் காலத்தில் புதைக்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் தேடி வனப் பகுதியொன்றில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னாரில் உள்ள வனப் பகுதியொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த அகழ்வுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் யுத்தக் காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை தேடியே சந்தேக நபர்கள் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட, ஹெட்டிமுல்லை, கொட்டியாகும்புர, பாணந்துரை, ஹல்பே ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 6 பேரும் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்றைய தினத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.