“நாடு மூன்று நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் நிதியமைச்சர் இந்த வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வந்தார்”என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று எதிர்க்கட்சிகள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், அது பயனற்றது என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி வழங்கும் திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்வதாகவும் அவர் கூறினார்.
பணக்கார வர்த்தகர்களின் வரிவிதிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதன் போது கேள்வி எழுப்பினார்.
இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து எதிர்கட்சிகள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. சோமாலிய, எத்தியோப்பிய பாணியிலான வரவு-செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.