
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சோமாலிய, எத்தியோப்பிய பாணியிலான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த நிவாரணம் இல்லை எனவும், மக்களை ஏமாற்றும் வெற்று ஆவணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் முற்போக்கான வரவு- செலவுத் திட்டத்தை எதிர்பார்த்தனர்.ஆனால் பிற்போக்குத்தனமான முட்டாள்தனமான திட்டம் ஒன்றே கிடைத்துள்ளது என்றார்.
“எதிர்கால திட்டம் இல்லாத இந்த வரவு- செலவுத் திட்டம் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றொரு அடியாகும்” என்றார்.
அது மாத்திரமன்றி அரச ஊழியர்களுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு இல்லாத இந்த வரவு செலவுத் திட்டம் மக்களை மறந்து, தங்கள் கைக்கூலிகளுக்கு ஏற்ற ஆவணமாகவே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.