January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மலையக மக்களின் வாக்கு வேண்டும் ஆனால், வாழ்க்கையை கம்பனிகள் தீர்மானிக்குமா?’

தொழிற்சட்டத்தை மீறி, தொழில் அமைச்சிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இந்தளவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. இதன் பின்புலம் என்னவென நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.

மலையக மக்களின் வாக்கு அரசாங்கத்திற்கு வேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையை ஏன் கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்ட மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்டு, துன்பம் இழைக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்பட்டு, இந்த நாட்டின் தொழிற் சட்டங்கள் அனைத்தையும் மீறி பெருந்தோட்ட கம்பனிகளினால் நடத்தப்படுகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சிப்பதை தடுக்க உரிய வேலைத்திட்டம் ஒன்றை தொழில் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் மலையக மக்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும்.மலையக மக்களுக்கு மாத்திரம் மனித உரிமைகளை மீறி வஞ்சிக்கப்பட்டு, பெண் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக சீரழிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பிய அவர்,

தொழிற்சட்டத்தை மீறி, தொழில் அமைச்சிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இந்தளவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?.இதன் பின்புலம் என்ன? இந்த கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் என்றார்.