May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோட்ட அதிகாரிக்கு எதிராக அவிசாவளை பென்றித் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள், தோட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியின் பென்றிக் தோட்டத்திற்கு செல்லும் பாதையை மறித்து இன்று காலை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பென்றிக் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பொன்றில் வீடொன்று விஸ்தரிக்கப்பட்ட நிலையில், குறித்த வீட்டை புதன்கிழமை மாலை, தோட்ட அதிகாரி பலவந்தமாக உடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்போது அதனை தடுத்து நிறுத்த முயன்ற வயோதிப பெண்ணொருவர் தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வயோதிப பெண்ணின் மகன்மார், தோட்ட அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த தோட்ட அதிகாரி மற்றும் வயோதிப பெண் ஆகியோர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர், பொலிஸார் எனக்கூறிக்கொண்டு சிவில் உடையில் சென்ற சிலர், குறித்த வீட்டை மீண்டும் உடைத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது, பொலிஸார் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் பிரதேச மக்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டை பொலிஸார் நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்தும் தோட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.