வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் நீண்டகால வதிவிட விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, வெளிநாட்டுக் குடியுரிமைகளைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இங்கு நிரந்தர வதிவிட விசாவை வழங்குவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் குடிவரவு- குடியகல்வு சட்ட திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
விசா காலம் மற்றும் விசா கட்டணங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, நாட்டின் முதலீட்டுத் துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் இந்த விவாதத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியாத மற்றும் தற்போது வெளிநாட்டு குடியுரிமையை கொண்டுள்ள இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசாவை வழங்குவதற்கும், நீண்ட கால விசாவை வழங்கும் போது ஒவ்வொரு முதலீட்டாளர்களும் கொண்டு வரும் முதலீட்டு தொகையை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் விசாக் காலத்தை தீர்மானிப்பதற்கும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதன்படி, 3 இலட்சம் அமெரிக்க டொலர் கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு 5 வருட விசாவும், 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை கொண்டு வரும் போது 10 வருட விசாவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.