
யாழ். மாவட்டத்தில் 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் முதல் 243 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மிகக் குறுகிய நேரத்தில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவானதால் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதோடு, வயல் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளி நிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் 6 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் ஒரு வீடு முழுமையாகவும் 92 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
காலநிலை சீரடைந்து வருவதால் நாளைய தினம் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என அரசாங்க அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.