கடும் மழையுடன் கூடிய காலநிலைய காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், அந்த மாவட்டத்தில் 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, சாந்திபுரம்,சௌத்பார், ஜிம்ரோன் நகர், மடுக்கரை விடத்தல் தீவு,தேவன்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன் விவசாய நிலங்களில் மழை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு உள்ளமையினால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் அமைந்துள்ள மீன் வாடிகள் சேதமாகி உள்ளதோடு, படகுகளும் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.