அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.
“அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்”, ”வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணம் வேண்டும்” என்ற கோசங்களை எழுப்பியவாறும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.