இலங்கை முழுவதும் அண்மைய வாரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் இந்த குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் போதைப் பொருள் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருளை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் நபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 80,000 பேர் என மதிப்பிட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 120,000 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது நாட்டில் ஹெரோயின் ஒரு பக்கெட்டின் விலை 3,000 ரூபாவாக உள்ளதாகவும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பக்கெட்டுகள் தேவைப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, போதைப் பொருள் பாவனையை நிறுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், மதத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.