இலங்கையில் வார இறுதியில் நீண்ட விடுமுறை வருவதையடுத்து தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணித்து பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஈடுபடுவது மீண்டும் ஒரு கொரோனா அலைக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.
நாளை (03) தீபாவளி விடுமுறை தினம் என்பதால் அடுத்துவரும் வார இறுதி நாட்களில் உல்லாச பயணங்கள் மற்றும் ஏனைய பயணங்களில் ஈடுபடுவதற்கு சிலர் ஏற்கனவே திட்டமிட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களினால் வைரஸ் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற தேவையற்ற அபாயங்களை மக்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ள அவர், எவரேனும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணத்தில் ஈடுபடுபவர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியம் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.