November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சிறுகட்சிகளின் கலந்துரையாடலில் ஜேவிபி கலந்துகொள்ளாதது தொடர்பில் கவலையடைகிறேன்”

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் ஜேவிபி கலந்துகொள்ளாதது தொடர்பில் கவலையடைவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் நடத்திய இந்த கலந்துரையாடலில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20 ஆம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், பாராளுமன்றத்தையும் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வரையறை செய்ய இந்த அரசாங்கம் முயல்கிறது என்பதனை சுட்டிக்காட்டினேன் என்று மனோ கணேசன் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்,முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளை போலவே, ஜேவிபி போன்ற மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளின் இருப்பையும் இது இல்லாதொழிக்க முயல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல கட்சி பிரதிநிதித்துவங்களுக்கு பாராளுமன்றமும், மாகாணசபைகளும் இன்றைய விகிதாசார முறையில் கீழேயே சாத்தியம். எனவே இத்தகைய பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலமேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணிக்க முடியும். இது இந்நாட்டு ஜனநாயகத்துக்கு அடிப்படை அவசியமாகும் என்று மனோ கணேசன் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த ஜனநாயகத்தை பாதுகாக்கும் பல கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் விகிதாசார தேர்தல் முறைமையை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஜேவிபி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என நான் விரும்பியிருந்தேன். ஆகவே இதை விளக்கி கூறி, நண்பர்கள் அனுர, விஜித ஆகியோரை நான் ஏற்பாட்டாளர்களின் சார்பில் அழைத்திருந்தேன். ஆனால்,அவர்கள் வரவில்லை. அவர்கள் எங்களுடன் இது தொடர்பில் கரம் கோர்க்க வேண்டும் என விரும்புகிறோம். எனினும் இதுபற்றி அவர்கள்தான் இனி முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசியில் அழைத்து எமது கலந்துரையாடல் தீர்மானங்களுக்கு தனது முழுமையான ஆதரவை என்னிடம் தெரிவித்தார் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.