January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டது!

இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கமைய இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலின் போது மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் சான்று பத்திரத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு, அனைத்து சீன முதலீட்டாளர்களுக்கும் அறிவிப்பதாகவும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இலங்கைக்கு உரம் கொண்டு வருவதற்காக இரு தரப்பினரிடையே ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய வெளியிடப்பட்ட கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை மத்திய வங்கி குறித்த சீன நிறுவனத்திற்கு செலுத்தாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட உரத்தில் பாதிப்பான பக்டீரியாக்கள் கண்டறிப்பட்டதை தொடர்ந்து, அந்த உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்காதிருக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.

அத்துடன் அரசாங்கத்தின் உர நிறுவனங்கள் இரண்டு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த சீன நிறுவனத்திற்கான கடன் சான்று பத்திரத்திற்குரிய நிதியை செலுத்துவதைத் தடுத்து இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறான நிலைமையிலேயே சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.