இலங்கை – பொலன்னறுவையில் உள்ள முன்னணி அரிசி உற்பத்தியாளர்கள் அரிசியின் விலையை மீண்டும் 10 ரூபா முதல் 30 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, ஒரு கிலோ கீரி சம்பா அரிசி மேலும் 30 ரூபாவினாலும், சம்பா மற்றும் நாட்டு அரிசி ஒரு கிலோவிற்கு10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்னணி அரிசி நிறுவனம் ஒன்றின் அதிகாரி கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரிசிக்கான விலை உயர்த்தப்பட்டதன் பின்னர் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் புதிய சில்லறை விலை 225 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசியின் புதிய விலை 165 ரூபாவாகவும், ஒரு கிலோ நாட்டு அரிசியின் புதிய விலை 140 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது விலை உயர்வால் ஒரு மாதத்திற்குள் கீரி சம்பா அரிசியின் கிலோ ஒன்றுக்கான விலை 60 ரூபாவினாலும், நாடு அரிசி கிலோ ஒன்றுக்கான விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்க முன்னணி அரிசி வியாபாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செப்டம்பர் 27 இரவு அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கிய பின்னர், பொலன்னறுவையில் உள்ள பாரிய நெல் உற்பத்தியாளர்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டி, செப்டம்பர் 28 அன்று ஒரு கிலோ நாடு அரிசியின் விலையை 115 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 165 ரூபாவாகவும் நிர்ணயித்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த 18ம் திகதி முன்னணி அரிசி நிறுவனங்கள், கீரி சம்பா அரிசியின் விலையை கிலோவுக்கு, 30 ரூபாவினாலும் சம்பா, நாடு அரிசிகளின் விலையை கிலோவுக்கு 15 ரூபாவினாலும் அதிகரித்தன.
எனினும் முன்னணி அரிசி விற்பனையாளர்கள் அரிசியின் விலையை இவ்வாறு அதிகரித்த போதும் தமக்கு 5 ரூபா லாபத்தை மட்டுமே பெற்றுக் கொள்ளும் வகையில் சந்தைக்கு விடுவதாக சில்லறை வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.