(File Photo)
கொழும்பு மாவட்டத்தின் அங்கொடை – முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபா 2.5 மில்லியன் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் முழு தலைக்கவசம் அணிந்து உயிரிழந்தவரின் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரதான சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரும் வகையில் புகைப்படங்களையும் விவரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் 911854481V என்ற அடையாள இலக்கத்துடன் முல்லேரியாவ புதிய நகரம், பரோன் திலகானந்தா மாவத்தை, இல. 42/02 இல் வசிக்கும் ‘ஜிலே‘ என அழைக்கப்படும் பொன்னம்பெரும ஆராச்சிகே டொன் தனுஷ் புத்திக என்ற 30 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் தோள்பட்டை முதல் முழங்கை வரை இரண்டு கைகளிலும் பச்சை குத்தியுள்ளதாகவும் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் WP XV 5432 எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தேடப்படும் சந்தேக நபர் தொடர்பான தகவல்களை வழங்கும் பொதுமக்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் வெளி தரப்பினருக்கு தெரிவிக்கப்படாது என்றும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் 071-8591727, 077-7370360 என்ற இலக்கங்களின் ஊடாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் 071-8592279 என்ற இலக்கத்தின் ஊடாக மேல் மாகாண (தெற்கு) குற்றப் பிரிவுக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.