January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழருக்கு இடமில்லை: மனோ விசனம்

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படாமை குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறையாக்குவதற்காக ஆராய்ந்து, அறிக்கை சமர்பிக்கும்படி ஜனாதிபதி கோதாபய 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.

குறித்த செயலணியில் ‘பொதுமன்னிப்பு பெற்ற (பாவமன்னிப்பு?) ஞானசார தேரரை தலைவராகவும் ஒன்பது சிங்கள நபர்களும் நான்கு முஸ்லிம்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தமிழரின் பெயரும் இல்லை’ என்று மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் பெயர்கள் இருக்கின்றன என்பதாலேயே முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்படப் போகிறது என்பதல்ல.

உண்மையில் முஸ்லிம்களைத்தான் இங்கே குறி வைக்கிறார்கள். அதற்கு கூடவே துணைக்கு சில முஸ்லிம்களை வைத்துக்கொள்ள போகிறார்கள் என்பதுவே பட்டவர்த்தனம்.

ஞானசாரரை தலைவராக போட்டால், உள்ளே என்ன நடக்கும் என புதிதாக வகுப்பெடுக்க தேவையில்லையே! பையை திறக்காமலேயே பைக்குள் என்ன இருக்கிறது என விளங்குகிறது

என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பேஸ்புக் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பெயருக்குக்கூட ஒரு தமிழரை நியமிக்க மறுக்கும் இந்த மனிதரின் வெறுப்பு மனப்பான்மை வெறுப்பூட்டுவதாகவும் மனோ தெரிவித்துள்ளார்.