சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய உரத்தொகுதியை ஏற்றி வரும் கப்பல் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த உரக் கப்பலில் இருந்து மாதிரிகள் மீண்டும் பரிசோதிக்கப்பட மாட்டாது என்றும், குறித்த சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டிற்கு உரம் இறக்குமதி செய்வதற்கு மூன்றாம் தரப்பு சோதனை தேவைப்படும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
சீனாவை தளமாகக் கொண்ட உர நிறுவனமொன்று இலங்கைக்கு தரமற்ற உரங்களை அனுப்பியுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து நாட்டில் உரம் தொடர்பான சர்ச்சை உருவானது.
உர மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து தீங்கு விளைவிக்க கூடிய ‘எர்வினியா’ என அடையாளம் காணப்பட்ட நுண்ணுயிர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த நிறுவனம் உர மாதிரிகளில் குறித்த நுண்ணுயிர் உள்ளதா என்பதை மீண்டும் சோதிக்க வேண்டும் என்று நேற்று வலியுறுத்தியதை அடுத்து அமைச்சரின் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.