
இலங்கையில் தடை செய்யப்பட்ட சீன உரத்தை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உர மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பெக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உர கொள்வனவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது.
குறித்த உர மாதிரிகள் இரண்டு தடவைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பெக்டீரியாக்கள் கண்டறியப்பட்ட நிலையில், மூன்றாவது பரிசோதனை ஒன்றுக்கும் தயாராகுவதாக தெரியவருகிறது.
இலங்கை- சீனா என இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனம் ஒன்றின் மூலம் மூன்றாவது பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெக்டீரியாக்கள் கண்டறியப்பட்ட உர மாதிரிகளை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துவதில் பயனில்லை என்று விவசாய அமைச்சின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் புத்தி மாரம்பே சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன உரத்தை கொண்டுவந்த கப்பல் இலங்கையின் எந்தவொரு துறைமுகத்துக்கு நுழைவதையும் அனுமதிப்பதில்லை என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.