சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள சேதன உரங்களை, இரு தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரை கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உரங்களை வழங்கும் சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் கம்பனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உர கையிருப்பில் அர்வினியா பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்தத்தை இரத்து செய்து, உர இருப்பை அகற்ற வேண்டும்.இல்லையெனில், இலங்கை நிபந்தனையற்ற கொடுப்பனவுகளை செலுத்தி, உரத் தொகையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதன உரத் தொகைக்கான கடன் கடிதம் செப்டம்பர் 17 அன்று திறக்கப்பட்டது என்றும் கடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விநியோக திகதிக்கு ஏற்ப செப்டம்பர் 23 அன்று உரத் தொகை அனுப்பப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உர இருப்பு சரியான நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதை தடுக்க செயற்கையான தடையை வாங்குபவர் உருவாக்குகிறார் என்று சந்தேகிக்க காரணம் இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.