மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காரமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்தப் பகுதியில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில், வெளிமாவட்ட சிங்கள மக்களைத் திட்டமிட்டு மிகவும் இரகசியமான முறையில் குடியேற்ற முயற்சிக்கப்படுவதாக தெரிவித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள குடுப்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்குக் காணி வழங்குவதற்காக இன்று காலை, புனானை வனவிலங்கு திணைக்களக் கட்டடத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
அத்துடன் காணி தொடர்பாக தகவல் பதிவுசெய்யப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு காரமுனைக்கு தங்களது இடங்களைக் காண்பிக்கவென காணி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன், ஞா.ஶ்ரீநேசன் உள்ளிட்ட குழுவினர் குறித்த காணி வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்தக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியதுடன், ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர் .
இதன்போது அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஆணையாளர் பொலிஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, இ.பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவான், மட்டடக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணி, மகளிர் அணி உறுப்பினர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.