Photo: Facebook/ Bandaranaike International Airport
ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று நிலைமையால் நாட்டின் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளால் சுற்றுலாத்துறை கடந்த பல மாதங்களாக வீழ்ச்சியடைந்திருந்தன.
எனினும் தற்போது நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி இந்த மாதத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 7,096 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 45,413 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் இந்தியா, கஜகஸ்தான், ஜெர்மனி, உக்ரைன், அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.