முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை ஒக்டோபர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த எழுத்தாணை மனு இன்று இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, வசந்த கரன்னாகொட மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
2008 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொடவும் தொடர்புபட்டுள்ளதாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, வசன்த கரன்னாகொட ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு கடந்த 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி அவன்தி பெரேரா குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்ட மா அதிபரின் குறித்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை அன்றைய தினத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.