
கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு, பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்காகவா? என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பிர் வே.இராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் அறிவித்தலின்படி அடுத்து வருகின்ற நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்பதாக நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று இராதகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மாணவர்கள் அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். அப்படியானால் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை வழங்கிய பின்பு பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘கொழும்பில் இருக்கின்ற மாணவர்களுக்கு ஒரு சலுகையும் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சலுகையையும் செய்ய முற்படுவது மிகவும் தவறான ஒரு செயற்பாடாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.