இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, இந்தியாவில் தனது முதலாவது சர்வதேச இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
‘மெனிகே மகே ஹிதே’ பாடலின் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகி யொஹானி டி சில்வா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செப்டெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமானார்.
அங்கு அவர் இரண்டு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, நேர்காணலிலும் கலந்து கொண்டிருந்தார். அத்தோடு பிரபல நடிகர்கள் மற்றும் சினிமா துறையினருடனும் சந்திப்புகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை, டெல்லி இசை நிகழ்ச்சியின் போது கிட்டார் இசைக் கருவி முகத்தில் இடித்ததில் யொஹானியின் இடது கண் புருவம் காயமடைந்திருந்தது.
எனினும் அவர் திட்டமிட்டபடி தனது இசை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கு பற்றி இருந்தார்.
இந்தியாவில் யொஹானியின் நேரடி இசை நிகழ்ச்சிகளும் நேர்காணல்களும் பெரும் வரவேற்பை பெற்றன.
இதன்படி, இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு 11.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக யொஹானி டி சில்வா, நாடு திரும்பியுள்ளார்.
யொஹானிக்கு விமான நிலையத்தில் பாதுகாப்பும் விசேட வரவேற்பும் வழங்கப்பட்டுள்ளது.