November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாய்களை பிடித்த தம்பதியினருக்கு மனநலம் பாதிப்பு?; பரிசோதனைக்கு உத்தரவு!

இலங்கை, வாதுவ பகுதியில் ஆறு நாய்களை ஏற்றிச் சென்ற தம்பதியினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா என்ற கோணத்தில் ஆராய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில் ஆறு நாய்களை ஏற்றிச் சென்ற தம்பதியினர் சந்தேகத்தின் பேரில் வாதுவை பொலிஸாரால் இன்று (12) கைது செய்யப்பட்டனர்.

நாய்கள் பாதுகாப்பு அமைப்பால் பொலிஸ் அவசர பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய வாதுவ ரயில் நிலையத்திற்கு அருகே 6 நாய்களையும் சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு 2, ஜோஷான் வீதியை சேர்ந்த 42 வயது முகமது சுத்திக், மற்றும் வெலிப்பிட்டியைச் சேர்ந்த 38 வயது கோரலகே ஷ்ரியானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் லஹிரு என் சில்வா உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய சந்தேக நபர்களை மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதோடு, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நாய்களை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் செல்லப் பிராணிகள் காப்பகத்திற்கு பரிந்துரைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.