
தேசிய மற்றும் சர்வதேச கடன்களை சமாளிக்க குறுகிய காலத்தில் அரசாங்கம் 54.900 கோடி ரூபா பணத்தை அச்சடித்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டில் சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூலை மாதம் வரையில் அரச மொத்த வருமானமானது 79,800 கோடி ரூபாவாகும். ஆனால் மொத்த செலவீனமானது 100,150 கோடி ரூபாவாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா காரணங்களை கூறினாலும், 2009 ஆம் ஆண்டில் வரவு – செலவு இடைவெளியானது 522 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனால் தற்போது வரவு, செலவு இடைவெளி 94 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 28 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும், இந்த நேரத்தில் கடந்த காலங்களை மாத்திரம் விமர்சித்துக்கொண்டு இருக்காது டொலர் பெறுமதியை தக்கவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.