நுவரெலியா, இராகலை தோட்டத்தில் 5 பேர் உயிரிழந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது அந்த வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்தனர்.
அந்த வீட்டில் இளைய மகனின் முதலாவது பிறந்த நாளுக்காக நேற்று இரவு, சிறியதொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் இரவு 11 மணியளவில் வீடு தீப்பற்றி எரிவதை அயலவர்கள் கண்டுள்ளதாகவும், அதன்போது தீயை அணைப்பதற்கு அவர்கள் முயன்ற போதிலும் அது கைகூடவில்லை என்றும் கூறுகின்றனர்.
மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடு ஒன்றே இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை 11.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குனதாச, அங்கு மரண விசாரணையை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது தீ விபத்து சம்பவத்தில் உயிர் தப்பிய வயது 30 நபர் சடலங்களை அடையாளம் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து சடலங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் உயிர் தப்பிய நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.