July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவுடனான தொடர்புகள் பற்றி சந்தேகிக்க வேண்டாம்’: இந்திய வெளியுறவு செயலாளரிடம் ஜனாதிபதி

சீனாவுடனான இலங்கையின் தொடர்புகள் குறித்து எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்திய வெளியுறவு செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளருடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிப்பதில்லை என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இணக்கப்பாடுகள் எட்டப்படும் இரு தரப்புத் தீர்மானங்களும் இரு நாடுகளினது மக்களுக்கும் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1960, 70 களில் காணப்பட்ட நட்புணர்வு மற்றும் தொடர்புகளை மீளக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இந்திய வெளியுறவு செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் விளைவுகள் பற்றி தான் நல்ல புரிதலை கொண்டிருப்பதாக கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்து, செயற்படுவதன் தேவை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.

“யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, காணாமல் போனோரது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கு இந்திய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.