November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை’: மறுக்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இலங்கையின் வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வன சரணாலயப் பகுதிகளில் தனியார் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்கள் இருந்தால், அவை கையகப்படுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை வடக்கில் மாத்திரம் அன்றி தமது பிரதேசங்களிலும் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி காணிகள் தொடர்பான பிரச்சினையை சீர்செய்ய முயற்சித்த போது, அவர் சுற்றுச் சூழலை அழிப்பதாக சேறு பூசப்பட்டதாகவும் ஜோன்ஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எங்கள் பிரதேசங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. வீடு அல்லது மலசலகூடம் வனஜீவாராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள வலயத்திற்குள் உள்ளன. ஆனால், அதனை சீர் செய்ய முயற்சித்த போது, அதனை அரசியலுக்குள் கொண்டு சென்றனர்.

அத்துடன், முல்லைத்தீவில் நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகியன வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டன. அவை மட்டுமே அங்கு வனஜீவராசிகள் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, நீங்கள் கேட்டவாறு அதிகாரிகள் குழுவொன்றை நாம் வடக்கிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம்” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.