Photo: headquarter of the Chinese government/wikipedia
அபிவிருத்தியடைந்து வரும் 42 நாடுகள், சீனாவிடமிருந்து வெளிப்படுத்தப்படாத அல்லது மறைக்கப்பட்ட கடன்களாக 385 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வில்லியம் எண்ட் மேரி பல்லைக்கழகத்தின் ‘எட்டேட்டா’ என்ற அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தித் தளங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் ஒரே பாதை திட்டத்தின் கீழ் இந்த கடன் வசதியை குறித்த நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளதாக ஆய்வு கூறுகின்றது.
இந்த கடன் தொகையானது ஒவ்வொரு நாட்டினதும் மொத்த தேசிய உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பகின்றது.
அரசாங்கங்களுக்கு இடையில் பெற்றுக்கொள்ளப்படும் கடன்களுக்கு மேலதிகமாக உலக வங்கியின், கடன் அறிக்கையிடப்படும் முறைமைக்கு அப்பால் வெவ்வேறு நிறுவனங்களால் இவ்வாறு மறைமுகமாக கடன்களை பொற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.
2000 – 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகின் 165 நாடுகளில் 843 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 14,427 சீன திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கண்டிறியப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து மறைமுக கடன் ஒப்பந்தங்களை முன்னெடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஈராக், வடகொரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு, சீனாவிடமிருந்து உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் தெற்காசியாவில் கடன் பெற்றுக் கொண்டுள்ள நாடுகளாக இலங்கை மற்றும் நேபாளம் உள்ளன.
சீனாவிடமிருந்து அதிக கடன் வாங்கியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 வது இடத்தில் உள்ளது என எட்டேட்டா அபிவிருத்தி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் சீனாவிலிருந்து கடன் பெற்றுக்கொள்ளும் முன்னணி உலக நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. ரஷ்யா இதுவரை பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகை 151.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.