இலங்கையில் ஒக்டோபர் 1 ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 1 முதல் 15 ஆம் திகதி வரையில் ஒரு பிரிவாகவும், 15 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் இன்னுமொரு பிரிவாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒழுங்குவிதிகளுக்கு அமைய பொதுப் போக்குவரத்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலுக்கு செல்வோர், சுகாதார தேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள், பொருட்கள் கொள்வனவுக்காக மட்டுமே வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியும்.
கூட்டங்கள், கருத்தரங்குகளை இட அளவில் 25 வீதமானோருக்கு பங்குபற்றக் கூடியவாறும் மற்றும் 25 பேருக்கு உட்பட்டோருக்கு உட்பட்ட எண்ணிக்கையிலானோரை கொண்டதாகவுமே நடத்த முடியும்.
அத்துடன் விழாக்கள், விருந்துகள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திறந்த அரங்கு மற்றும் வீடுகளில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க அனுமதி வழக்கப்பட்டுள்ளதோடு, பிரதேச மற்றும் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் அவை திறக்கட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வாராந்த சந்தைகளும் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும்.
உணவகங்களில் 15 ஆம் திகதி வரையில் உள்ளே அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்படவில்லை. 15 ஆம் திகதிக்குப் பின்னர் இட அளவில் 50 வீதமானோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஒரே நேரத்தில் இட அளவில் 10 வீதமானோரையே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
வங்கிகளுக்கு உள்ளே ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களே இருக்க முடியும்.
சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேரத்தை ஒதுக்கி வாடிக்கையாளர்கள் சிகையலங்கார நிலையங்களுக்குச் செல்ல முடியும்.
முன்பள்ளிகளை திறக்க அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இட அளவில் 50 வீதமான மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். பல்கலைக்கழங்கள் மற்றும் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருமண நிகழ்வுகளை 15 ஆம் திகதி வரையில் 10 பேருடன் நடத்த முடியும். 15 ஆம் திகதிக்கு பின்னர் 50 பேருடன் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரணம் மற்றும் இறுதிக் கிரியை நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் 10 பேரை கொண்டதாகவே அமைய வேண்டும்.
வழிபாட்டு தலங்களில் சமூக ஒன்றுகூடல்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தொடர்ந்தும் அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதோடு, கண்காட்சிகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.