January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிலாளர்கள் அநியாயமாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து கட்டுக்கலை தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுக்கலை தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி தோட்ட அதிகாரிகளும் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 9 தொழிலாளர்களை தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், தோட்ட நிர்வாகமே அடாவடியில் ஈடுபட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டி தொழிலாளர்களும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

“மலசலகூடம் அமைப்பதற்குக்கூட தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவதில்லை. ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்திலும் ஏமாற்றம் இடம்பெறுகின்றது.

6 மாதங்களுக்கு மேலாக நிர்வாகம் எம்மை அடக்கி ஆள முயற்சிக்கிறது. இந்நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.