November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹம்பாந்தோட்டை தொழிற்பூங்காவில் முதலீடு செய்ய சீன வாகன தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம்!

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் தொழிற்பூங்காவில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீனாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான கிங் லாங் நிறுவனத்துடன் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம்  குழு கையெழுத்திட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் சியாமென் நகரில் உள்ள கிங் லாங் அலுவலகங்களில் இடம்பெற்றுள்ளது. இதில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கோஹன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

“ஹம்பாந்தோட்டை துறைமுகம் மிகவும் மூலோபாயமாக அமைந்துள்ளதால், தென்கிழக்கு ஆசியாவில் புதிய சந்தைகளை எங்களால் அடைய முடியும்” என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிங் லாங் மோட்டார் குழுமத்தின் பிரதித் தலைவர் ஜாங் பின் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஒத்துழைப்பு மற்றும் இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கோஹன முயற்சிகள் இலங்கைக்கு இந்த முதலீட்டு வாய்ப்பு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக சீன வியாபாரிகள் குழுவின் தலைமைப் பிரதிநிதியும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான்சன் லியு தெரிவித்தார்.

1988 இல் ஆரம்பிக்கப்பட்ட “சியாமென் கிங் லாங் யுனைடெட் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கோ. தனியார் நிறுவனம்”, பெரிய மற்றும் நடுத்தர அளவிலான பேருந்துகள், ரயில் பெட்டிகள் மற்றும் வேன்களை உற்பத்தி செய்கிறது.

3 பெரிய உற்பத்தி தளங்களுடன், கிங் லாங்கின் தயாரிப்புகள் உலகெங்கிலும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் மற்றும் பிராந்தியங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, சீனாவின் முதல் 10 ஆட்டோமொபைல் உற்பத்திகளில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.