சீனாவை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு மட்டுமே இலங்கையர்கள் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெருமளவான இலங்கையர்களுக்கு சீனத் தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அரசு ஏற்றுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
கொரோனா தடுப்பூசி ஏற்றுவதில் அரசு பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்துகின்றது.சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்புகளான கொரோனா தடுப்பூசிகளை இந்த தந்திரத்தை பயன்படுத்தியே மாகாணத்துக்கு, மாவட்டத்துக்கு என பிரித்து பிரித்து ஏற்றி வருகின்றது எனக் கூறிய அவர்,
சீனத் தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளன. ஆனால் இந்த தடுப்பூசியைத்தான் அரசு பெருமளவான இலங்கையர்களுக்கு ஏற்றுகின்றது.அதாவது சீனாவை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு மட்டுமே இலங்கையர்கள் பயணம் செய்ய வேண்டுமென்பதே இந்த அரசின் நோக்கமாகவுள்ளது.
சீன தடுப்பூசியை பல வெளிநாடுகள் ஏற்க மறுத்துள்ளதால் தான் இளைஞர், யுவதிகள் பலரும் இதனை ஏற்ற மறுக்கின்றனர். எனவே, இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் திட்டம் முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால் எந்த தடுப்பூசியை ஏற்றினாலும் இலங்கையர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வழிவகைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். எனவே இது தொடர்பில் அரசு வெளிநாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.