பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் இரட்டை நாடகமாடுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி ஒரு கருத்தை கூறுகின்றார். ஆனால் வெளிவிவகார அமைச்சு வேறு காரணிகளை கூறுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளக செயற்பாடுகளில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்த இணைந்து செயற்படுவோம். அதாவது பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து கடமையாற்றுவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.பிரச்சினைகளை தீர்க்க நாம் தயாராக உள்ளோம். நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்ட தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், வெளிவிவகார அமைச்சு இதனை நிராகரித்துள்ளது. வெளியக பொறிமுறை எதற்கும் நாம் இணக்கம் தெரிவிக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம், எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் என கூறியுள்ளனர். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தில் இரட்டை நாடகம் ஆடுகின்றது என சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பாங்கீன்- மூனுடன் கூட்டு அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்.அதில் கண்டிப்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார். 12 ஆண்டுகளின் பின்னர் அவரது தம்பி கோட்டாபய ராஜபக்ஸவும் அதே விடயங்களை கூறியுள்ளார் என சுட்டிக்காட்டினார்.