வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வீசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் குடிவரவு – குடியகல்வு திருத்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பில் பாதுகாப்புக்கான ஆலோசனைக் குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தலைமையில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பான 2 வது வாசிப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாதுகாப்புக்கான ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளது.
சட்டமூலத்தின்படி, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் 14 வது பிரிவு, தற்போதைய வீசா வழங்கும் காலத்தை 2 இலிருந்து 5 வருடங்களாக அதிகரிக்க திருத்தம் செய்யப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் யுவி சரத் ரூபசிறி தெரிவித்தார்.
மேலும், அமைச்சரின் ஒப்புதலுடன் வீசா வழங்கப்படும் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அத்தோடு, நிரந்தர குடியுரிமை வீசாவை அறிமுகப்படுத்துவதுடன், தொடர்புடைய விதிமுறைகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு நீண்டகால வீசா வழங்குவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான சூழலை வழங்குவது உள்ளிட்ட பல சமூக மற்றும் பொருளாதார நன்மைகள் உள்ளதாக ஜெனரல் யுவி சரத் ரூபசிறி சுட்டிக்காட்டினார்.