
ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய, பகுதியில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் உட்பட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேக நபர்களும் காட்டில் மறைந்திருந்த நிலையில், நேற்று (21) இரவு வீரகெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மற்ற நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (19) வீரகெட்டிய கஜநாயக்கமவில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தங்காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் முன்னதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
பிரதான சந்தேக நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு, அவர்களை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.