பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை விரைவாக அழிப்பது குறித்து நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இது குறித்து ஆராய நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (22) ஒன்றுகூடவுள்ளதாக நீதி அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் அண்மைக்காலமாக இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரினால் பாரியளவில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.ஆனால் அவ்வாறு கைப்பற்றப்படுகின்ற போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து நீதி அமைச்சர் விசேட கவனம் செலுத்தி குழுவொன்றை நியமித்துள்ளதுடன், இன்றைய தினம் அந்தக் குழு ஒன்றுகூடி தீர்மானிக்கவுள்ளது.
இதன் முதல் கட்டமாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாமல் கைப்பற்றப்படுகின்ற போதைப் பொருட்களை மஜிஸ்திரேட் நீதிவான் முன்னிலையில் உடனடியாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, சந்தேக நபருடன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டால் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைத்தவுடன் குறித்த போதைப் பொருளை உடனடியாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, சட்டமா அதிபர் திணைக்களம், அரச பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த கலந்துரையாடலில் விரைவான முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.