February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தடுப்பூசிகள் அனைத்து புதிய மாறுபாடுகளுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்கும்”; நீலிகா மாளவிகே

“எதிர்காலத்தில் வரும் கொவிட் வைரஸின் புதிய மாறுபாடுகள் எதுவாக இருந்தாலும், தடுப்பூசிகள் அவை அனைத்துக்கும் எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன” என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.

இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் உள்ள கொவிட் -19 மாறுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் இல்லை என்றும் பேராசிரியர் நீலிகா மலவிகே கூறினார்.

இன்று (19) ஊடக அமைச்சில் இடம்பெற்ற நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை,நாட்டில் கொவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதோடு, மருத்துவமனையில் சேர்க்கும் நோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

“எதிர்காலத்திலும் இதனை பராமரிக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறினார்.

அத்தோடு,தடுப்பூசி தொடர்பான போலிச் செய்திகளை கருத்தில் கொள்ளாது இறப்புகளின் எண்ணிக்கையை  குறைப்பதற்காக மக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.