கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை தளரத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான தடை செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
டெல்டா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, கடந்த ஜுன் மாதம் முதல் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஜப்பானுக்குள் பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை முதல் அந்தத் தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ள ஜப்பான் அரசாங்கம், குறித்த நாடுகளில் இருந்து ஜப்பான் வருவோர், விமான நிலையத்தில் செய்யப்படும் கொவிட் பரிசோதனைகளின் பின்னர் மூன்று நாட்களுக்கு கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியாகிய பின்னரே அவர்களுக்கு நாட்டுக்குள் நடமாட முடியும் என்று அறிவித்துள்ளது.
இதேவேளை செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் பிரிட்டனின் கொவிட் தொடர்பான சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.