November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு மருத்துவ தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு!

மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதிப்பதானது கொவிட் விதிமுறைகளை சவாலுக்கு உட்படுத்தும் என பல மருத்துவ தொழிற்சங்கங்கள் கவலைகளை எழுப்பியுள்ளன.

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்து, பல்வேறு பிரதேசங்களில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் பெருந்திரளானவர்கள் கூடியிருந்தமையை தொழிற் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மதுபான விற்பனை நிலையங்களை திறக்கும் முடிவானது நாடு கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை மோசமாக பாதிக்கும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இதன் காரணமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதை மேலும் தாமதப்படுத்த வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத விதத்தில், நுகர்வோர் விரும்பியதை வாங்குவதற்கு பாதுகாப்பான பொறிமுறையை அறிமுகப்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே கொவிட் தொற்று இறப்புகள் குறைவடைந்து வரும் நிலையில், மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.