இராணுவ பாவனையிலுள்ள தனியார் காணிகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் மேலதிக வெளிப்படைத் தன்மையுடன் கூடிய செயன் முறையையும் போதிய கால அளவையும் கோரி யாழ்.மாவட்ட செயலரிடம் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி என்கிற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு யாழ்.மாவட்ட செயலருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிசாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகள் காரணமாக மீள்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக் கொள்ளல் தொடர்பாக வெளியிடப்பட்ட
கடிதம் தொடர்பில் எமக்கு எழுந்துள்ள கரிசனைகளை இவ் கடிதம் மூலம் முன்வைக்கின்றோம்.
இராணுவ ஆக்கிரமிப்புக்கள் காரணமாக நிலத்தை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு
சந்தர்ப்பங்களில் தமது நிலத்தை மீளப்பெறும் எதிர்பார்ப்புடன் பல அரச அதிகாரிகளிடம் தமது நிலம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர்.பல வருடங்களாக எவ்வித பிரதிபலனும் இல்லாமல் ஒரு அரசாங்க அலுவலகத்தில் இருந்து வேறு அரசாங்க நிறுவனங்களுக்கு மாறி மாறி சென்று தமது காணி தொடர்பான தகவல்களை ஒப்படைத்த காணிகளை இழந்த மக்கள் விரக்தியான ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் இம்முறை தகவல் வழங்குமாறு வெளியிடப்பட்டுள்ள இந்த கடிதமும் போலியான ஒரு வாக்குறுதி என அவர்கள் நினைக்கின்றார்கள்.அத்துடன் உங்களது கடிதத்தில் ஆவணங்களை ஒப்படைப்பதற்கான இறுதி திகதி குறிப்பிடப்படவில்லை.ஆனால் யாழ்ப்பாண மாவட்ட செயலக வலைத்தளத்தில் இறுதித் திகதியாக செப்டெம்பர் 15 என குறிப்பிடப்பட்டுள்ளது.இது உங்களது கடிதம் வெளியிடப்பட்ட திகதியின் அடிப்படையில் பார்க்கும் போது ஆவணங்களை சமர்ப்பிக்க மக்களுக்கு ஒரு மாத கால அவகாசம் கூட வழங்கப்படவில்லை.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இக்காலத்தில் போக்குவரத்து தொடர்பான மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.ஆகவே மக்கள் தமது மூல ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் நாட்டிற்கு வெளியே வசிக்கும் மக்கள் ஒரு மாதத்திற்கு குறைந்ததொரு காலத்தில் இவ் ஆவணங்களை சமர்ப்பிப்பது என்பது இயலாத ஒரு விடயமாக கருதப்படுகின்றது.
இந்த தகவல்களை பெறுவதற்கான நோக்கம் தொடர்பில் ஒரு தெளிவின்மை காணப்படுவது மக்கள் மத்தியில் இந்த செயன்முறை தொடர்பில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளதுடன், இராணுவம் மூலம் புதிதாக நில ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அக்கடிதத்தில் இலங்கைக்கு வெளியே வசிக்கும் மக்கள் தமது தகவல்களை எவ்வாறு சமர்ப்பிப்பது என கூறத் தவறியுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் காணப்படும் நிலங்களின் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
ஆகவே எமது கோரிக்கையானது அதிகாரிகள் மக்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தகவல்களை நில விடுவிப்பு தொடர்பில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆராய வேண்டும். அத்துடன் மக்கள் தகவல்களை வழங்குவதற்கான
கால எல்லை நீடிக்கப்பட வேண்டும்.கால அளவு நீடிக்கப்பட்டால் மக்கள் தகவல்களை திரட்ட போதிய கால அவகாசம் கிடைப்பதுடன்,எந்தவொரு குடும்பமும் இந்த செயன்முறையிலிருந்து தவறவிடப்படாமல் இருப்பதும் உறுதி
செய்யப்படும்.
உள்ளூர் அரசாங்க அதிகாரிகள்,அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன்,இந்த செயல்முறை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தேவையான தகவல்களை வழங்குவதற்கு வசதியாகவும்,மேலும் வெளிப்படையான மற்றும் ஒத்துழைப்பு செயல்முறையை உருவாக்கவும் நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.
காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி என்ற ரீதியில் நாம் நிலங்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்களுக்கு திருப்பித் தர அரசாங்கம் மேற்கொள்ளும் உண்மையான முயற்சிகளுக்கும்,வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த அனைத்து சமூகங்களுக்கும் நில உரிமையை உறுதி செய்யும் செயற்பாடுகளுக்கும் எமது முழு ஆதரவை வழங்குவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.