அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த லோஹான் ரத்வத்தவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் குறித்த சம்பவத்தை மறைப்பதற்கு நடவடிக்கையெடுத்த சிறைச்சாலைகள் அதிகாரிகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஆகியோர் தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.