இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அரச கட்டடங்கள் தாக்கப்படலாம் என்ற மின்னஞ்சல் வெளியாகியதைத் தொடர்ந்தே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும், விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக விமான நிலைய கடமை முகாமையாளர் ருவண் பிரியதர்ஷன உறுதிப்படுத்தியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ஊடாக தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி விமான நிலையம் மற்றும் அரச நிறுவனங்கள் தாக்கப்படலாம் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள நால்வர் விடுவிக்கப்படாவிட்டால், தாக்குதல் நடத்துவதாக மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதுதொடர்பாக அரச புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.