July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சோதனைச் சாவடிகளில் தடுப்பூசி அட்டை பரிசோதனை!

வீதிகளில் பயணிக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் அட்டையை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று முதல் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களை தாமதிக்காது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான அட்டை பரிசோதனை செய்யும் நடவடிக்கையை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களின் தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இதேவேளை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தவும் அல்லது என்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது. இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.