இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இன்று (14) நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 1,628 பேர் இனங் காணப்பட்டுள்ளதாக இன்று மாலை 06.20 மணிக்கு தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 90,110 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,நாட்டில் மேலும் 136 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 60 பெண்களும் 76 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,567 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 63,030 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்தோடு, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 15, 649 ஆக பதிவாகியுள்ளது.
இதனிடையே எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
இதனிடையே நாட்டில் பதிவாகும் தொற்று நோய் தரவுகளின் அடிப்படையில் நாடு இன்னும் ஆபத்தான கட்டத்தை கடக்கவில்லை என இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது மூன்றாவது அலையின் வேகம் குறைந்து வரும் நிலையில், மற்றொரு அலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பது அவசியம் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.