November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று ஆரம்பம்!

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்வைத்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியது.
கூட்டத் தொடரை ஆரம்பித்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து வாய்மொழி மூல அறிக்கையை சமர்பித்தார்.

இந்த அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஆணையாளர் மிச்செல் பச்செலெட், இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கையில், நாட்டில் இடம்பெறுவதாக கூறப்படும் இராணுவமயமாக்க நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், நாட்டில் அமுல்படுத்தப்படும் அவசரகால சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தொடர்தல், காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் பதிலளிக்க வெளிவிவகார அமைச்சு தயாராகியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பில் இருந்து வீடியோ ஊடாக மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.