வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் சில மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் பலர் அந்த நாடுகளில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெறும் எதிர்பார்ப்புடன் சுகாதார பிரிவுகளுக்கு வருகை தருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
எனினும் குறிப்பிட்ட தடுப்பூசிகளை எதிர்பார்த்து தம்மிடம் வருவதில் எந்த அர்த்தமும் இல்லை என கூறியுள்ள அவர், அந்த குறிப்பிட்ட தடுப்பூசிகளை வழங்குவதற்கு தமக்கு அனுமதிக்கப்பட வில்லை எனவும் கூறினார்.
குறிப்பாக 20-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் தாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.
அத்தோடு ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி மையத்திற்கு மட்டுமே அந்த குறிப்பிட்ட தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் சில மாணவர்கள் எழுத்துபூர்வ கோரிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து குறிப்பிட்ட தடுப்பூசியை அவை வழங்கப்படும் மையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.