குவைத் நாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு மூன்றாவது டோஸாக குவைத் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குவைத் அரசாங்கம் பைசர், மொடர்னா, கொவிஷீல்ட் மற்றும் ஜொன்சன் அண்ட் ஜொன்சன் தடுப்பூசிகளுக்கு மாத்திரமே அனுமதி அளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அவதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், உடனடி தீர்வைப் பெற்றுக் கொள்ள குறித்த விடயம் நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கமைய ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்று குவைத்துக்கு வேலைக்குச் செல்லவுள்ள இலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லவுள்ள இலங்கையர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது மிக முக்கியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்ற 14 நாட்களுக்கு பிறகு நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.