November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் நெருக்கடி நிலைக்கு இராணுவமயமாக்கமே காரணம்’: ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி நிலைக்கு இராணுவமயமாக்கமே காரணம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.

கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வை ஆரம்பித்து வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிக்கும் போதே, மிச்செல் பச்செலெட் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை மீளாய்வு செய்வதற்கான நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்தை அவர் பாராட்டியுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொட விசாரணைகள் நிறுத்தப்பட்டது, துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது மற்றும் பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டிப்பதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான காலம் வரையரை செய்யப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் அமுல்படுத்தப்படும் உணவு விநியோகம் தொடர்பான அவசர கால நிலைமை பரந்த அளவில் காணப்படுவதாகவும் சிவில் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா என்பதை தாம் அவதானித்து வருவதாகவும் பச்செலெட் குறிப்பிட்டுள்ளார்.

“சிவில் சமூக அமைப்புகள் தொடர்பாக வரையப்பட்டுள்ள புதிய சட்ட விதிகள், சிவில் அமைப்புகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படுவது கவலையளிக்கிறது.

காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்தின் கிளிநொச்சி உட்பட பிராந்திய அலுவலகங்கள் மீதான நம்பிக்கை மக்களிடையே கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இழப்பீடுகளை வழங்கும் தேசிய திட்டம் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அலுவலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த அலுவலகத்துக்கான பணியாளர்களை உள்வாங்கும் வேலையும் நடைபெறுகிறது. இதற்கான வரவு- செலவு ஒத்துழைப்புகளை உறுப்பு நாடுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்”

என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார்.